மாமல்லபுரத்தில் கொட்டும் மழையிலும் புராதன சின்னங்களை கண்டு களித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்தில் கொட்டும் மழையிலும் மாமல்லபுரம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் புராதன சின்ங்களை கண்டுகளித்தனர்.
மாமல்லபுரத்தில் கொட்டும் மழையிலும் புராதன சின்னங்களை கண்டு களித்த சுற்றுலா பயணிகள்
Published on

சுற்றுலா பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு மழையையும் பொருட்படுத்தாமல் ஓரளவு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகை தந்திருந்ததை காண முடிந்தது. மழையால் சுற்றுலா வந்த பயணிகள் பலர் அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளிக்க கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் மழையால் அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளிக்க முடியாமல் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட ஒரு சில புராதன சின்னங்களை மட்டும் இதமான சூழல், குளிர்ந்த காற்று சீதோஷண நிலையில் பார்த்து ரசித்துவிட்டு சென்றதை காண முடிந்தது.

குடை இல்லாமல் வந்த சுற்றுலா பயணிகள் பலர் மழையை பொருட்படுத்தாமல் மழை நீரில் நனைந்தபடியே புராதன சின்னங்களை கண்டுகளித்தனர். குறிப்பாக சுற்றுலா வாகனங்கள் வரத்து வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே காணப்பட்டது.

இணைய தள சேவை

அதனால் மாமல்லபுரம் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படவில்லை. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் வந்து சென்றதை காண முடிந்தது. மழையால் இணைய தள சேவை சரியாக இயங்காததால், செல்போன் மூலம் ஆன்லைன் நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். மழையால் புராதன சின்ன பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் இன்றி களையிழந்து காணப்பட்டது. நேற்று காலை முதல் பெய்த மழையால் மாமல்லபுரம் கலங்கரை விளக்க சாலையில் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மழை நீரில் மெதுவாக ஊர்ந்து சென்றன. மேலும் மழையால் மாமல்லபுரம் மற்றும் கொக்கிலமேடு, வெண்புருஷம், தேவனேரி, புதுஎடையூர்குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம், புதுகல்பாக்கம், சூளேரிக்காட்டு குப்பம் உள்ளிட்ட மீனவர் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று பலத்த மழை, கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் குறிப்பிட்ட மீனவர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com