

மாமல்லபுரம்,
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வருகிற 2-ந்தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டதால் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கிருஷ்ண மண்டபம, ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்து தங்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் சுற்றுலா வாகனங்கள் குவிந்ததால் மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. போக்குவரத்து நெரிசலில் கடற்கரை சாலைக்கு வாகனங்கள் சென்று வர ஒன்றன்பின், ஒன்றாக ஊர்ந்து சென்றதால் அங்கிருந்து வாகனங்கள் வெளியேற நீண்ட நேரம் ஆனது. போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில் போக்குவரத்து போலீசார் சரி செய்து கொண்டிருந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை ஓர கடைகளில் வியாபாரம் களைகட்டியது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.