தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை

சாலை சீரமைப்பு பணிகளை விரைவில் முடித்து தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை
Published on

ஊட்டி

சாலை சீரமைப்பு பணிகளை விரைவில் முடித்து தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொட்டபெட்டா மலைச்சிகரம்

ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைச்சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2,636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிமாநிலங்கள், மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து சென்றனர்.

கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி தொட்டபெட்டா மலைச்சிகரம் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின் ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது.

பணிகள் முடியாததால் தடை

தொடர் மழையால் தொட்டபெட்டா சாலையில் ஒரு பகுதி பெயர்ந்து சேதமடைந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

அங்கு சோதனைச்சாவடி மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்தது.

மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. பின்னர் மழைநீர் செல்லும் வகையில் கான்கிரீட்டால் ஆன குழாய்கள் கட்டப் பட்டது. இந்த பணிகள் முடிந்தும் இருபுறமும் தார்சாலை அமைக்கப் படாமல் உள்ளது. இதனால் இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அனுமதிக்க வேண்டும்

கடந்த 10 மாதங்களாக தொட்டபெட்டா மலைச்சிகரம் மூடப்பட்டு உள்ளதால் தொலைநோக்கி இல்லம், காட்சி முனை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சாலை இலைகள் படிந்து காணப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, மலைப்பிரதேசமான ஊட்டியில் சுற்றுலா தலங்களை ரசிக்க திட்டமிட்டு குடும்பத்துடன் வந்து செல்கிறோம். உயர்ந்த மலைச்சிகரமான தொட்டபெட்டாவை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி இந்த மலைச்சிகரத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com