

கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் குளிர் சீசன் நிலவுகிறது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன் நகரின் பல்வேறு பகுதிகளில் உறைபனி நிலவியது. தற்போது மீண்டும் ஏரிச்சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் உறைபனி நிலவியது. பகல் நேரத்தில் அதிகாலை முதல் மாலை வரை வெப்பம் நிலவினாலும் கடும் குளிர் காற்று வீசுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடியே வெளியே செல்கின்றனர். கடும் குளிர் காரணமாக பகல் நேரத்திலேயே பொதுமக்கள் நடமாட்டம் இன்றி தெருக்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குளிர் அதிகம் இருப்பதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் பல்வேறு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. மேலும் நகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையே கோக்கர்ஸ் வாக் பகுதியில் மேக கூட்டம் மலை முகடுகளை மறைத்து காட்சியளித்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.