பதற்றமான வாக்குச்சாவடிகளை இணையதளம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை

பதற்றமான வாக்குச்சாவடிகளை இணைய தளம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரம் தேர்தல் பொது பார்வையாளர் நரேந்திரசிங் பாமர் தெரிவித்து உள்ளார்.
பதற்றமான வாக்குச்சாவடிகளை இணையதளம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பணியாற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் ராமநாதபுரம் பொது பார்வையாளர் நரேந்திரசிங் பாமர் கலந்து கொண்டு, வாக்குச் சாவடியில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசினார். இதில் தேர்தல் நுண் பார்வையாளர்கள், தேர்தல் தாசில்தார் திருமலை உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்து 537 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்து உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக மொத்தம் 120 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்து உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவாடிகள் 22 அமைந்து உள்ளன. மேற்குறிப்பிட்ட 22 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய தேர்தல் ஆணையத்தால் 28 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, அவர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தேர்தல் நுண் பார்வையாளர்கள் கண்காணித்து ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு நடவடிக்கைகளை தேர்தல் பொது பார்வையாளருக்கு அறிக்கை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை இணைய தளத்தில் நேரடியாக பார்வையிடும் வகையில் கேமரா பொருத்தப்பட்டு முழு நடவடிக்கையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com