

பொன்னேரி,
பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்(வயது46) அதே பகுதியை சேர்ந்தவர் வாசு(40). விவசாயிகளான இவர்கள் 2 பேரும் நேற்று விவசாய பொருட்களை வாங்குவதற்காக பொன்னேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களது மோட்டார் சைக்கிள் லிங்கபையன்பேட்டை கிராமம் அருகே வந்தபோது பின்னால் வந்த ஒரு டிராக்டர் திடீரென விவசாயிகள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டர், நடுரோட்டில் கிடந்த 2 பேர் மீதும் கண் இமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய டிரைவர், டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகிறார்கள்.