

நீடாமங்கலம்,
நீடாமங்கலம் அருகே உள்ள வெள்ளங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன் சேகர். இவர் நீடாமங்கலம் வர்த்தகர் சங்க துணைச்செயலாளராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த ராசு என்கிற கார்த்திகேயன், காமராஜ், குறலரசன், சிலம்பரசன், வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் சம்பவத்தன்று இரவு நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்தனர்.
பின்னர் 5 பேரும் நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியில், தனது கடையில் இருந்த நீடாமங்கலம் வர்த்தகர் சங்க துணைச்செயலாளர் சேகரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து சேகர் நீடாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குறலரசனை (23) நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.