திருவெறும்பூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக வியாபாரிகள் கோஷம்

திருவெறும்பூர் கடை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அப்போது அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி சிறு வியாபாரிகள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக வியாபாரிகள் கோஷம்
Published on

திருவெறும்பூர்,

திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் அதனை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் சார்பில் அரியமங்கலம் முதல் துவாக்குடி வரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த 4 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர். இதற்கிடையே ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்று திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சில நாட்களாக மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய தரைக்கடை வியாபாரிகள் அனுமதிக்கப் பட்டனர்.

கோஷம்

இந்நிலையில் பால்பண்ணை முதல் திருவெறும்பூர் மலைக்கோவில் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி இருந்த அதிகாரிகள், நேற்று காலை அணுகுசாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினர். ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீசு அனுப்பியும், அகற்றப்படாத இடங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்த கடையின் மேற்கூரையை மட்டும் சிறிதளவு அகற்றிவிட்டு, பக்கத்து கடையை இடிக்க அதிகாரிகள் சென்றனர்.

அப்போது அங்கிருந்த சில கட்சிகளை சேர்ந்தவர்களும், சிறு வியாபாரிகளும், பெரிய கடையின் மேற்கூரையை முழுவதுமாக அகற்றும் படியும், ஒரு தலைப்பட்சமாக அதிகாரிகள் செயல்படக் கூடாது என்று கூறியும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த கடையில் மின் இணைப்பு துண்டிக்கப்படாததால், தற்போது இடிக்காமல் பின்னர் இடிப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அவர்கள் சமாதானமடைந்தனர். இதனை தொடர்ந்து அணுகுசாலை அமைப்பதற்காக திருவெறும்பூர் கடைவீதி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com