

தஞ்சாவூர்,
மத்திய அரசின் சுற்றுலாத்துறை, தமிழகஅரசின் சுற்றுலாத்துறை, தென்னகபண்பாட்டுமையம், சுற்றுலா வளர்ச்சி குழுமம், இன்டாக் அமைப்பு ஆகியவை சார்பில் தஞ்சை பெரியகோவிலில் நேற்றுமுன்தினம் தூய்மையே சேவை இயக்கம் மற்றும் கலாசார திருவிழா நடைபெற்றது.
அதன்தொடர்ச்சியாக நேற்றுகாலை தஞ்சை ராஜகோபால பீரங்கி மேடையில் இருந்து பாரம்பரிய நடைபயணம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ராஜகோபால பீரங்கி மேடையின் வரலாற்றை அறிந்து கொண்ட பிறகு சாமந்தான்குளத்திற்கு சென்றனர். அந்த குளத்தை சுற்றி பார்த்த அவர்களுக்கு, குளம் எந்த மன்னர் காலத்தில் வெட்டப்பட்டது? எந்தந்த பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது? இந்த குளத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வந்து கொண்டிருந்தது? என்பது குறித்து விளக்கப்பட்டது.
கோலப்போட்டி
பின்னர் அவர்கள் அரண்மனை வளாகத்தில் உள்ள சார்ஜா மாடிக்கு சென்று அங்குள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து அரண்மனை வளாக சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களையும் பார்த்து ரசித்தனர். இந்த நடைபயணம் காசுகடை தெரு வழியாக சென்று ராஜகோபாலசாமி கோவிலில் நிறைவடைந்தது. இதையடுத்து அரண்மனை வளாகத்தில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 30 பேர் கலந்து கொண்டு கோலங்களை வரைந்தனர்.
சிறப்பாக கோலம் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் சுற்றுலா அனைவருக்குமானது என்ற தலைப்பில் கருத்தரங்கம் தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் இந்திய சுற்றுலாத்துறை தென் மண்டல உதவி இயக்குனர் பத்மாவதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெயக்குமார், இன்டாக் அமைப்பின் கவுரவ செயலாளர் முத்துக்குமார் மற்றும் கார், வேன் டிரைவர்கள், விடுதி மேலாளர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.