போக்குவரத்து அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

நாமக்கல்லில் போக்குவரத்து இணை ஆணையர் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின
Published on

நாமக்கல்,

சென்னையில் போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றி வருபவர் வேலுச்சாமி. இவர் நாமக்கல் காந்திநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் இவரது வீட்டிற்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டில் உள்ள பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தனர். மடிக்கணினியையும் ஆய்வு செய்தனர்.

வேலுச்சாமி சென்னையில் பணியில் இருப்பதால், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனை பிற்பகல் 3 மணி அளவில் முடிவடைந்தது. இதில் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதேபோல் நாமக்கல் அருகே கீரம்பூரில் உள்ள வேலுச்சாமிக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 10 லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

போக்குவரத்து இணை ஆணையர் வேலுச்சாமி மீது முறைகேடாக சொத்து சேர்த்ததாக ஈரோட்டில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காந்திநகரில் உள்ள அவரது வீடு மற்றும் கீரம்பூரில் உள்ள பண்ணை வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தினோம். இதில் வங்கி டெபாசிட், இன்சூரன்சு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பான சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சோதனை நடத்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரி வேலுச்சாமி வருகிற 30-ந் தேதி பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்துத்துறை அதிகாரி வீட்டில் நடந்த சோதனை நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com