ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒதப்பை தரை பாலத்தின் மீது வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
Published on

ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது. அதிகபட்சமாக வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக திறக்கப்பட்டது.

இப்படி கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் அணைக்கு அருகே ஒதப்பை கிராமத்திலுள்ள தரைப்பாலத்தை தொட்டு சென்றது. தரைப்பாலத்தின் பாதுகாப்பு கருதி ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளுருக்கு வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வழியாக இயக்கப்பட்டன. இந்நிலையில் மழை முழுவதுமாக நின்று விட்டதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.

தரைப்பாலம் சேதம்

நேற்று ஏரிக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஒதப்பை தரைப்பாலத்தில் வெள்ளம் குறைந்தது. இதனையடுத்து தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதாவது ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து மதகுகள் வழியாக ஆரணி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 2 நாட்களுக்கு முன் இந்த அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஊத்துக்கோட்டை ஆற்றின் மீது தரைப்பாலம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

வாகன போக்குவரத்து நிறுத்தம்

அதிர்ஷ்டவசமாக தரைப்பாலம் இடது புறத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மீது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டதால் வாகனங்கள் எளிதாக சென்று வருகின்றன. இல்லை என்றால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீர் செய்த பிறகுதான் வாகனப் போக்குவரத்து தொடங்கியிருக்கும்.

2015-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 3 மாதங்கள் வரை ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மிக சிரமத்துக்கு இடையே மாற்று வழியில் வாகனங்கள் சென்று வந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com