திருவாரூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் அருகே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
திருவாரூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
Published on

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள குன்னியூர் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் சிலருக்கு நிவாரணம் வழங்கப்படாமல் விடுபட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரி குன்னியூர் கடைவீதியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வருவாய்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாகுபாடின்றி புயல் நிவாரண பொருட்கள் வழங்க வலியுறுத்தி நேற்று சேகரை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் லெட்சுமாங்குடி-கொரடாச்சேரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்களை குரும்பல் ஊராட்சியை சேர்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி குரும்பல் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் மணலி கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், குணா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல திருத்துறைப்பூண்டியை அடுத்த எழிலூர் ஊராட்சியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனி தாசில்தார் மலர்கொடி வந்தார். அப்போது விடுபடாமல் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் தனி தாசில்தாரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகள் சாலை மறியல் வலங்கைமான் அருகே புலவர்நத்தம் பகுதியில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் கதிர்விடும் நிலையிலும், ஒரு சில இடங்களில் இளம் பயிராகவும் உள்ளது. இந்த நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இந்த நிலையில் நெற்பயிர்களை காப்பாற்றிட வெண்ணாற்றில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நேற்று விவசாயிகள் புலவர்நத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் ஒரிரு நாட்களில் படிப்படியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com