‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கோவில்பட்டியில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தை செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
Published on

கோவில்பட்டி,

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில், கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் ஒரு மாத இலவச உண்டு உறைவிட பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலையில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, கல்லூரி நிர்வாக இயக்குனர் அருணாசலம், கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று தீவிர முயற்சி மேற்கொண்டோம். இதுகுறித்து சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் ஏராளமான தமிழக மாணவ- மாணவிகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், தமிழகம் முழுவதும் 9 இடங்களில் ஒரு மாத உண்டு உறைவிட இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்வழி கல்வியில் பயின்றவர்களுக்கு 6 மையங்களிலும், ஆங்கிலவழி கல்வியில் பயின்றவர்களுக்கு கோவில்பட்டி உள்ளிட்ட 3 மையங்களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நமது நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நீட் தேர்வுக்காக தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சீரிய முயற்சியால், நீட் தேர்வில் தமிழக மாணவ- மாணவிகள் அதிகம் பேர் வெற்றி அடைந்து சாதனை படைப்பார்கள். நீட் தேர்வு மட்டுமின்றி வேறு எந்த போட்டித்தேர்விலும் மாணவர்கள் வெற்றி பெற சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலை ஏற்படாது. தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசும் பாதுகாப்பாக இருக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வுமே மாறி மாறி ஆட்சிக்கு வருவதால், பிரேமலதா விஜயகாந்த் ஆத்திரத்தில் பேசி வருகிறார்.

ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் மாசுக்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இதனை முதல்-அமைச்சருடன் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அறிவிப்பார்கள். கடந்த 1974-ம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை அப்போதைய தி.மு.க. ஆட்சியில் புதுப்பிக்க தவறியதே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். ஆனால் அதனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறந்து, அரசியல் லாபத்துக்காக போராட்டம் நடத்துகிறார்.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிந்தாலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீருவோம். சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்த பாதுகாப்பு கேட்டால், அதுகுறித்து முதல்-அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் முடிவு செய்வார்கள். காவிரி பிரச்சினை தொடர்பாக, அந்த துறையின் மத்திய மந்திரியை சந்தித்து விட்டு, பிரதமரை சந்திக்க நினைத்து இருந்தோம். ஆனால் அதற்குள்ளாக பிரதமர் சந்திக்க மறுத்து விட்டார் என்று சிலர் தவறாக கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

விழாவில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சீனிவாசன், நகரசபை ஆணையாளர் அச்சையா மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com