நாளை முதல் ரெயில்கள் இயக்கம்: நெல்லையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

நாளை (திங்கட்கிழமை) முதல் ரெயில்கள் இயக்கப்படுவதை முன்னிட்டு, நெல்லையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
நாளை முதல் ரெயில்கள் இயக்கம்: நெல்லையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
Published on

நெல்லை,

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து பொது போக்குவரத்து முடங்கியது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பயணிகள் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சரக்கு ரெயில்களும், சிறப்பு ரெயில்களுமே சில நாட்கள் இயக்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து மாவட்டங்களுக்கு உள்ளேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை (திங்கட்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்குகிறது.

இதேபோன்று தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, ரெயில் போக்குவரத்துக்கும் நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி பல்வேறு சிறப்பு ரெயில்கள் மாநிலத்துக்குள் இயக்கப்படுகிறது. இதில் நெல்லை வழியாகவும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதாவது சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கும், மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து எழும்பூருக்கும் தினசரி ரெயில் இயக்கப்படுகிறது.

இதுதவிர ஏற்கனவே கொரோனா காலத்தில் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட நாகர்கோவில்-திருச்சி இண்டர்சிட்டி ரெயிலும் நெல்லை வழியாக இயக்கப்படுகிறது. இதேபோன்று செங்கோட்டை- சென்னை இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரெயில் ஆகிய 2 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி-சென்னை இடையே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. அங்கு அரசின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. காலை 8 மணி முதல் பயணிகள் வரிசையில் சமூக இடைவெளி விட்டு, வரிசையில் நின்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாங்கி சென்றனர்.

ரெயில் பெட்டிகளில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால், அந்த அடிப்படையிலேயே ரெயில்வே ஊழியர்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொடுத்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது.

பயண தேதி அன்று முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் வரவேண்டும். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். இதற்காக பயணிகள், ரெயில் நிலையத்துக்கு பயண நேரத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே வரவேண்டும். அப்போது முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

கொரோனா அறிகுறி தென்படும் பயணிகள், ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பயணத்தின்போது அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்திருந்த பெரும்பாலான பயணிகள், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு செல்வதற்கு முன்பதிவு செய்தனர். அவர்கள், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்கினால், நெல்லையை சேர்ந்த பயணிகளுக்கு கூடுதல் இருக்கைகள் கிடைக்கும், பயணமும் எளிதாக இருக்கும். எனவே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com