ஆயுதப்படையில் இருந்து 144 போலீசார் திருப்பூர் மாநகர போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம்

ஆயுதப்படையில் இருந்து 144 போலீசார் திருப்பூர் மாநகர போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதப்படையில் இருந்து 144 போலீசார் திருப்பூர் மாநகர போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, மத்தியம், ஊரகம், வீரபாண்டி, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி ஆகிய 8 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என 2 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், 2 மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை விட குறைவான போலீசாரே பணியாற்றி வருகிறார்கள்.

மாநகர மக்கள் தொகை 10 லட்சத்தை தாண்டிவிட்டது. போலீஸ் நிலையங்களில் இருக்கின்ற போலீசாரை வைத்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர் குற்றங்கள் நடைபெறும்போது போலீஸ் நிலையங்களில் போதுமான போலீசார் இல்லாமல் வழக்கை விசாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதுபோல் மகளிர் போலீஸ் நிலையங்களிலும் போலீசார் பற்றாக்குறையால் பெண்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசில் பணியாற்றிய 144 போலீசார் மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக போலீஸ் நிலையங்களில் எழுத்துப்பணியில் ஈடுபடும் எழுத்தர்களை உருவாக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு எழுத்தர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகங்களில் போலீசாருக்கு எழுத்துப்பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். 144 போலீசார் போலீஸ் நிலையங்களில் பணியமர்த்தும்போது வழக்கு விசாரணை உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் போக்குவரத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் படிப்படியாக பணியமர்த்தப்பட உள்ளனர். இதனால் மாநகரில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியும் மேம்பட வசதியாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com