

கரூர்,
கரூர் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னர் ரவுண்டானாவில் சிக்னலை கடந்து வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் சிக்னலுக்காக காத்திருக்கும் போது கோவை சாலை, மேற்கு பிரதட்சண சாலை, திரு.வி.க. சாலை ஆகியவற்றில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைவது உண்டு. இதனால் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பஸ் நிலையம் இடமாற்றம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பஸ் நிலைய இடமாற்றம் என்பது தற்போது இல்லை என்ற நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோவை சாலையில் இருந்து மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. 80 அடி சாலையில் இருந்து தொடங்கி ஜவகர் பஜாரில் தாசில்தார் அலுவலகத்தில் இறங்கும் படியும், மனோகரா கார்னர் ரவுண்டானாவில் இருந்து மேற்குபிரதட்சண சாலையில் காமாட்சியம்மன் கோவில் அருகேயும், திருச்சி சாலையில் உழவர் சந்தையும் அருகேயும் இறங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக 80 அடி சாலை, மனோகரா கார்னர் ரவுண்டானா, உழவர் சந்தை, ஜவகர் பஜார் ஆகிய இடங்களில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நெடுஞ்சாலை துறை முதன்மை பொறியாளர் ராஜவேல்துரைபாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வுமேற்கொண்டனர்.
இந்த பணி குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், புதிதாக கட்டப்பட உள்ள மேம்பாலம் ஒரு வழிபாதையாகும். தலா ஒரு தூண்கள் மட்டுமே கொண்டு கட்டப்படும். மேலும் திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் இருந்து கோவை சாலை வழியாக கரூர் பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னரை கடந்து செல்லும் வாகனங்கள் பாலத்தில் செல்ல முடியும். தற்போது உள்ள சாலையில் எந்தவித மாற்றமும் செய்யப்பட போவதில்லை. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வழக்கம் போல வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும். மேலும் கடைகள் எதுவும் இடிக்கப்படாமல் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மேம்பாலத்திற்கான வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை ஓரிரு நாட்களில் தொடங்கப்படும். மேம்பாலம் கட்டுமான பணி 3 மாதத்தில் தொடங்கப்படும். பாலம் கட்ட ரூ.75 கோடி செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்ட தொடங்கிய பின் 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றனர். இந்த திட்டத்தை தொடங்கி விரைவில் முடித்தால் கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.