

மயிலாடுதுறை,
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்திய ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்த பின்னரும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பவில்லை. நேற்று மயிலாடுதுறையில் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.
மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மூலமாக மொத்தம் 77 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இங்கு 225 டிரைவர்கள், 208 கண்டக்டர்கள் என 433 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் நேற்று 3 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். இதையடுத்து போக்குவரத்துக்கழகம் பயிற்சி டிரைவர்களை பணிக்கு அமர்த்தி, 52 பஸ்களை இயக்கியது. அரசு பஸ்களில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கண்டக்டர்கள் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பணியாற்றினர். அவர்களிடம் கண்டக்டர்கள் பயன்படுத்தும் பண பை இல்லை. சாதாரண பைகளை பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் வசூலித்தனர். இதனால் பொதுமக்கள் பஸ்களில் பயணிப்பதற்கு தயக்கம் காட்டினர்.
கூடுதல் கட்டணம்
போதிய அனுபவம் இல்லாத டிரைவர்கள் பஸ்களை இயக்கியதாலும், சரியான நேரத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததாலும் அரசு பஸ்களில் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. அதே நேரத்தில் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.