புதுவைக்கு சுற்றுலா வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி பலி அலையில் சிக்கிய 2 பேர் மீட்பு

புதுவைக்கு சுற்றுலா வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி பலியானார். அலையில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர்.
புதுவைக்கு சுற்றுலா வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி பலி அலையில் சிக்கிய 2 பேர் மீட்பு
Published on

அரியாங்குப்பம்,

மதுரை அனஞ்சியூர் தமிழ்நகரை சேர்ந்தவர் உதயக்குமார். இவருடைய மகன் சியாம் (வயது 20). மதுரையில் உள்ள தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்து வரும் நண்பர்கள் சுபாஷ் (20), யோகேஷ் (20).

கிறிஸ்துமஸ் விடுமுறையை தொடர்ந்து மாணவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலாவாக வந்தனர். நேற்று அதிகாலை புதுச்சேரிக்கு வந்த அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர்.

வாரி சுருட்டிய அலை

பின்னர் பகல் 2 மணி அளவில் 3 பேரும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். சுற்றுலா வந்த பயணிகள் வேறு சிலரும் அந்த பகுதியில் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். நேற்று கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில் திடீரென எழுந்த ராட்சத அலை மாணவர்கள் 3 பேரையும் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது. அலையில் சிக்கி தத்தளித்த அவர்கள் உதவி கேட்டு கூச்சல் போட்டனர். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

ஒருவர் பலி

அப்போது கடற்கரையில் பயணிகள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள் (லைப் கார்ட்ஸ்) 2 பேர் உடனடியாக கடலுக்குள் குதித்து அலையில் சிக்கி தத்தளித்த 3 மாணவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சிகிச்சைக்காக புதுச்சேர அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் சியாம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவர்கள் சுபாஷ் மற்றும் யோகேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்றோர் கதறல்

கல்லூரி மாணவர் சியாம் இறந்தது குறித்து, மதுரையில் உள்ள அவருடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதறி அழுதபடி புதுவைக்கு புறப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com