60 வயதில் ஆனந்த பயணம்

நீரு காந்தி, மோனிகா, பிரதீபா சபர்வால் ஆகிய மூன்று பெண்களும் 60 வயதை எட்டியவர்கள். டெல்லியை பூர்வீகமாக கொண்டவர்கள்.
60 வயதில் ஆனந்த பயணம்
Published on

நீரு காந்தி, மோனிகா, பிரதீபா சபர்வால் ஆகிய மூன்று பெண்களும் 60 வயதை எட்டியவர்கள். டெல்லியை பூர்வீகமாக கொண்டவர்கள். பணி ஓய்வு பெற்று வீட்டுக்குள் முடங்கி கிடந்தவர்களை கார் பயணம் ஒன்றிணைத்திருக்கிறது. மூவருமே பிரயாணத்தில் நாட்டம் கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகு குடும்பத்திற்கே முழு நேரத்தையும் செலவிட்ட நிலையில், மீதமிருக்கும் வாழ்க்கையில் மாற்றத்தை நாடி பயணத்தை தொடங்கிவிட்டார்கள். காரிலேயே உலகை வலம் வர வேண்டும் என்பதுதான் அவர்களின் லட்சியம். அதற்கு முன்னோட்டமாக இந்தியாவை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய முதல் பயணத்தை டெல்லியில் தொடங்கி ராமேஸ்வரம் நோக்கி சென்றார்கள். அந்த பயணம் 29 நாட்கள் நீடித்திருக்கிறது. 4, 400 கிலோ மீட்டர் தூரம் பயணித்த அவர்கள் 23 இடங்களில் தங்கி இருந்து அந்தந்த பகுதியில் இருக்கும் முக்கிய இடங்களை சுற்றிப்பார்த்திருக்கிறார்கள்.

பயணத்திற்கு வயது தடையில்லை என்பதை குறிப்பிடும் வகையில் பேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்து தங்கள் பயண அனுபவத்தை புகைப்படங்களாக எடுத்து பதிவிட்டு வருகிறார்கள். சாலை பயணத்தை நெடுஞ்சாலைகளில் மூத்த நங்கைகள் என்ற பெயரில் குறிப்பிட்டு வருகிறார்கள். இவர்களது இரண்டாவது கட்ட பயணம் ராஜஸ்தானில் தொடங்கி குஜராத்தில் முடி வடைந்திருக்கிறது.

மோனிகா செல்லும் இடங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனித்து கொள்கிறார். பிரதீபா பயண ஏற்பாடுகளையும், செலவுகளையும் கவனித்து கொள்கிறார். தாங்கள் விரும்பிய நேரத்தில் சமைத்து சாப்பிடுவதற்கு சவுகரியமாக காருக்குள்ளேயே சிறிய சமையல் அறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உணவு பொருட்களை பதப்படுத்துவதற்காக சிறிய ஐஸ் பெட்டியையும் எடுத்து செல்கிறார்கள்.

மலைப்பாதையில் பயணம் செய்வது மகிழ்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்திவிடும். மவுண்ட் அபு பகுதிக்கு செல்லும்போது நான் தான் காரை ஓட்டினேன். அங்கு சென்றடையும் வரை ஒருவித அச்ச உணர்வு இருந்து கொண்டே இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வெற்றிகரமாக காரை ஓட்டினேன். அந்த அனுபவம் மறக்க முடியாதது என்கிறார் நீரு காந்தி.

பயண செலவு ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். நகைகள் அணிவதையும் தவிர்த்திருக்கிறார்கள்.

நகைகள் அணியாததால் பயமின்றி பயணத்தை தொடர முடிகிறது. அதிக பொருட்களையும் கொண்டு செல்வதில்லை. எட்டு ஆடைகள் வரையே எடுத்து செல்வோம். முதல் உதவி பெட்டி, தண்ணீர், போதுமான உணவு பலகாரங்கள், கூடுதலாக பெட்ரோல் எடுத்து சென்றால் போதும். பயணம் இனிமையாக அமைந்துவிடும். பாலைவன பகுதியில் காரிலேயே சென்றது, அங்கு ஒட்டகத்தில் பயணம் செய்தது புதுமையான அனுபவம் என்கிறார், நீரு காந்தி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com