தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்

பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.
தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்
Published on

தஞ்சாவூர்,

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று காலை தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலகத்தில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

விழிப்புணர்வு

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா, உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர் திலகர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். இதில் தீ தடுப்பு சாதனங்கள் முறையாக பராமரித்து தீ விபத்துக்களை தடுப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்தன.

திருவையாறு

திருவையாறு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் தீயணைப்பு வீரர்களுக்காக இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தீயணைப்பு பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அன்பு செல்வம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com