திருச்சி விமான நிலைய ஓடுபாதை அருகில் தீ புற்கள் பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருச்சி விமான நிலைய ஓடுபாதை அருகில் புற்கள் மீது பற்றி எரிந்த தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலைய ஓடுபாதை அருகில் தீ புற்கள் பற்றி எரிந்ததால் பரபரப்பு
Published on

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. துபாய் உள்ளிட்ட அரபுநாடுகள், மலேசியா மற்றும் சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகில் இருந்த புற்கள் மீது நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. புதர் மண்டி கிடந்த புற்கள் மீது எரிந்த தீயும் அதனால் ஏற்பட்ட கரும்புகையும் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் ஓடுபாதையில் ஏறுவதற்காகவோ அல்லது இறங்குவதற்கோ விமானம் எதுவும் வர வில்லை. ஆனால் விமானங்களை நிறுத்துவதற்கான ஏப்ரன் என்ற இடத்தில் 2 விமானங்கள் நின்று கொண்டு இருந்தன.

இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் பார்த்து விமான நிலைய தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அலாரம் ஒலித்த படி தீயணைப்பு வாகனம் அங்கு வந்தது. உடன் ஒரு ஆம்புலன்சும் வந்தது. தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைக்கும் பணியில் இறங்கினர். இதனால் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

விமான நிலைய வளாகம் முழுவதுமே பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். பயணிகள் வருகை, புறப்பாடு, நிர்வாக அலுவலகங்கள், சரக்கு போக்குவரத்து பிரிவு பகுதிகள் தவிர ஓடுபாதை உள்ளிட்ட இடங்களுக்கு யாரும் செல்வதற்கு அனுமதி கிடையாது. அந்த அளவிற்கு பாதுகாக்கப்பட்டு வரும் ஓடுபாதை அருகில் புற்கள் தீப்பிடித்து எரிந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து எதுவும் நடக்கவில்லை. இது அவ்வப்போது நடத்தப்படும் ஒரு வகையான பாதுகாப்பு ஒத்திகை தான் என பதில் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com