திருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கினாலும், சில இடங்களில் லாரிகள் ஓடியதால் காந்திமார்க்கெட்டுக்கு காய்கறிகள் வழக்கம் போல் வந்தன.
திருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது
Published on

திருச்சி,

3 மாதங்களுக்கு ஒருமுறை டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியதால் சரக்குகள் தேக்கம் அடைந்தன. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லாரிகள் வழக்கம்போல் ஓடின. ஆனால் சில இடங்களில் லாரிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள் லாரிகளை பழுது பார்க்கும் வேலையில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம் குறித்து விசாரித்தபோது, திருச்சி மாவட்டத்தில் 2 லாரி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சங்கத்தினர் அறிவித்தபடி வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதாகவும், இதனால் திருச்சி மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை என்றும் தெரிவித்தனர். மற்றொரு சங்கத்தினரோ ஜூலை 20-ந் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் தான் பங்கேற்போம் என்று தெரிவித்து உள்ளனர். திருச்சி காந்திமார்க்கெட்டுக்கு நேற்று காலை லாரிகளில் வழக்கம்போல் காய்கறிகள் வந்து இறங்கின. இதனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com