திருச்சி அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திருச்சி அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி
Published on

திருச்சி,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் மாவட்டந்தோறும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். அது பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, மேலபுதுமங்கலத்தை சேர்ந்தவர் சோழன். விவசாயி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 8). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். கார்த்திக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரன காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால் கார்த்திக்கை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்தபோது, கார்த்திக்கிற்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்து கடந்த 20-ந் தேதி கார்த்திக்கை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்ச பலனின்றி நேற்று முன்தினம் இரவு கார்த்திக் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து கார்த்திக்கின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாரேனும் அனுமதிக்கப்பட்டால், அது குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை 5 சிறுவர்கள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com