திருச்சி அரசு மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைக்கான நாட்கள் குறைப்பு நோயாளிகள் அதிர்ச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைக்கான நாட்கள் குறைப்பு நோயாளிகள் அதிர்ச்சி
Published on

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவ மனையின் முதல் தளத்தில் இதயநோய் சிறப்பு சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் சிகிச்சையும், அதற்கான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 800 நோயாளிகள் வரை சுழற்சி முறையில் மருந்து, மாத்திரைகள் பெற்று செல்கிறார்கள். இந்தநிலையில் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கேத்லேப் சிகிச்சை பிரிவு தொடங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக வாரத்துக்கு 3 நாட்கள் செயல்பட்டு வந்த இதயநோய் சிகிச்சை புறநோயாளிகள் பிரிவை வாரம்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதயநோய் சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு வாரத்துக்கு 3 நாட்கள் செயல்பட்டபோது, 3 நாட்களும் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது 2 நாட்களாக குறைக்கப்பட்டால் நோயாளிகளுக்கு கடும் சிரமம் ஏற்படும். ஆகவே 3 நாட்களும் இதய நோய் சிகிச்சை புற நோயாளிகள் பிரிவை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் அனிதா கூறுகையில், அரசு மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சை புற நோயாளிகள் பிரிவுக்கு நாளொன்றுக்கு 300 முதல் 400 நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இதில் இதயநோய் சிகிச்சை பிரிவின் அங்கமான கேத்லேப் பிரிவுக்கு நவீன உபகரணங்கள் வந்துள்ளது. தற்போது கேத்லேப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதயநோய் சிகிச்சை புறநோயாளிகள் பிரிவுக்கான வேலை நாட்கள் 3 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக் கப்பட்டு வருகிற 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாதவகையில் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இதய நோய்க்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர் கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com