திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.மனோகரன் தீவிர ஓட்டு வேட்டை

வீர சூர மாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு, வீடாக பொதுமக்களை சந்தித்தும், கடை, கடையாக வியாபாரிகளை சந்தித்தும் வாக்கு சேகரித்தார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.மனோகரன் தீவிர ஓட்டு வேட்டை
Published on

திருச்சி,

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொருளாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர். மனோகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று மாலை திருச்சி மேலப்புலிவார்டு சாலை வன்னி மரத்தடி பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அங்குள்ள வீர சூர மாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு, வீடாக பொதுமக்களை சந்தித்தும், கடை, கடையாக வியாபாரிகளை சந்தித்தும் வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர் மத்தியில் அவர் பேசியதாவது, கடந்த 2011 முதல் 2016 வரை இந்த தொகுதியில் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த வாக்காள பெருமக்களுக்கு இப்போது மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் அரசு தலைமை கொறடாவாக பணியாற்றியபோது மக்களின் தேவை அறிந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்தேன். ஆனால் கடந்த 5 ஆண்டு காலமாக இந்த தொகுதியில் நான் செய்த பணிகளை அறுவடை செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மக்களை சந்திக்கவே இல்லை.

அதனால்தான் இப்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். மீண்டும் உங்களுக்கு சாலை, மின் விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க எனக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். உங்களது பொன்னான வாக்குகளை குக்கர் சின்னத்தில் அளித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளருடன் அ.ம.மு.க. மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் வரகனேரி சரவணன், வட்ட செயலாளர் வக்கீல் ராஜா, பூக்கடை சுந்தர், டாக்டர் சுப்பையா, முன்னாள் கவுன்சிலர் பெஸ்ட் பாபு, மலைக்கோட்டை தொகுதி தே.மு.தி.க. செயலாளர் நூர் முகமது, பழனிமாணிக்கம் உள்பட அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com