திருச்சி உய்ய கொண்டான் வாய்க்காலில் 7 அடி நீள முதலை குளிக்க வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்

திருச்சி உய்ய கொண்டான் வாய்க்காலில் 7 அடி நீள முதலையை கண்ட பொதுமக்கள் குளிக்க முடியாமல் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருச்சி உய்ய கொண்டான் வாய்க்காலில் 7 அடி நீள முதலை குளிக்க வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்
Published on

திருச்சி,

காவிரியின் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்று உய்ய கொண்டான். ராஜ ராஜசோழனால் வெட்டப்பட்ட இந்த வாய்க்கால் அகன்ற காவிரியில் பெட்டவாத்தலை அருகே பிரிந்து திருச்சி நகரில் கோர்ட்டு, தென்னூர், பாலக்கரை, வரகனேரி மற்றும் அரியமங்கலம் வழியாக சென்று இறுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நிறைவடைகிறது. திருச்சி நகருக்குள் இந்த வாய்க்காலானது பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதால் இதற்கு சர்ப்பவாய்க்கால் என்ற பெயரும் உண்டு.

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்த வாய்க்காலின் மூலம் பல ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. திருச்சி குழுமாயி கோவில் அருகில் உய்ய கொண்டானுடன் கோரையாறு வாய்க்கால் சேரும் இடமான தொட்டிப்பாலம், திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம், கோர்ட்டு, தென்னூர் உள்ளிட்ட திருச்சி நகர பகுதிகளில் மக்கள் இந்த வாய்க்காலை குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது தண்ணீர் வாய்க்காலின் இரு கரைகளையும் தொட்டபடி செல்வதால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் டைவ் அடித்து விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மேலும் விவசாயிகள் ஆடு, மாடுகளையும் குளிப்பாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் உய்ய கொண்டான் வாய்க்காலில் சோமரசம் பேட்டையில் இருந்து தொட்டிப்பாலத்திற்கு வரும் பகுதியில் நேற்று மதியம் சுமார் 7 அடி நீளம் உள்ள ஒரு முதலை வாய்க்காலின் நடுப்பகுதியில் புதர் மறைவில் படுத்து கிடந்தது. வெயிலின் சுகத்தை அனுபவிப்பதற்காக படுத்து இருந்த அந்த முதலை அவ்வப்போது வாயை பிளந்து அதன் கோர பற்களை காட்டியது. இதனை வாய்க்காலை ஒட்டியுள்ள சாலையில் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வாய்க்காலில் முதலை கிடப்பது பற்றிய செய்தி அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஏராளமானவர்கள் சாலையில் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். வழக்கமாக ஆற்றில் குளிப்பதற்காக வந்தவர்கள் வாய்க்காலுக்குள் இறங்கினால் முதலையால் ஆபத்து என அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

குறும்புக்கார இளைஞர்கள் சிலர் முதலை மீது கற்களை வீசினார்கள். இதனால் அந்த முதலை வாய்க்காலுக்குள் பாய்ந்து மறைந்து கொண்டது. உய்ய கொண்டான் வாய்க்காலை, அதன் கரையோரத்தில் வசித்து வரும் மக்கள் மட்டும் இன்றி பல இடங்களில் இருந்து வருபவர்களும் குளிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்வதற்கான வாய்க்காலாகவும் உள்ளது. எனவே பொது மக்களை மிரட்டும் முதலையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com