

பெரம்பலூர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் பெரம்பலூர், அரியலூர், உடையார்பாளையம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, லால்குடி, முசிறி, திருச்சி ஆகிய கல்வி மாவட்ட அளவில் 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ஏற்கனவே உடல்திறன் போட்டிகளான தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த தடகள போட்டிகளில் கல்வி மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு திருச்சி மண்டல அளவிலான தடகள போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்தது.
போட்டியினை பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ- மாணவிகளுக்கு தடகள போட்டிகளான 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டிகளில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு தலா 70 மாணவ- மாணவிகள் வீதம் மொத்தம் 560 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த தடகள போட்டிகளில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கி பாராட்டினார். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. தடகள போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் விளையாட்டு போட்டிகளுக்கு மாநில அளவில் அளிக்கப் படும் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிர மணியராஜா, தடகள பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.