துலே அருகே அரசு பஸ் மீது லாரி மோதல், குழந்தைகள் உள்பட 13 பேர் பலி - 15 பேர் படுகாயம்

துலே அருகே அரசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் குழந்தைகள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
துலே அருகே அரசு பஸ் மீது லாரி மோதல், குழந்தைகள் உள்பட 13 பேர் பலி - 15 பேர் படுகாயம்
Published on

துலே,

நந்தூர்பர் மாவட்டம் சகாதா நகரில் இருந்து அவுரங்காபாத்துக்கு மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. அந்த பஸ் இரவு 10.30 மணியளவில் துலே மாவட்டம் சகாதா-தோண்டைச்சா சாலையில் உள்ள நிம்குல் கிராமம் அருகே சென்றபோது, எதிரே கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி கண் இமைக்கும் நேரத்தில் பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ் மற்றும் லாரியின் முன்பகுதிகள் சுக்குநூறாக நொறுங்கின. இதில் சம்பவ இடத்திலேயே 2 வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் 9 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பலியானவர்களில் 2 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர்.

மேலும் விபத்தில் சிக்கிய 15 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பஸ்- லாரி மோதிய விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படும் என மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com