

பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 37). லாரிகளை வாடகைகு விட்டு தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஸ்கர் அவரது மனைவி உஷா (35), மற்றும் குழந்தைகளை காணவில்லை என பாஸ்கரின் தாய் மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்த நிலையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாஸ்கர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பாஸ்கரின் மனைவி உஷா, மைத்துனர் பாக்யராஜ் ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கரின் மனைவி உஷாவை கைது செய்தனர். நேற்று பாக்யராஜ் (39), அவரது நண்பர்கள் வெங்கடேசன் (40), கோகுல் (24) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பாஸ்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவி சந்தேகப்பட்டதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த உஷா வீட்டில் இருந்த இரும்பு குழாயால் பாஸ்கரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கிய பாஸ்கரை அவரது மனைவி உஷா தனது அண்ணன் பாக்கியராஜை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அவர் தனது நண்பர்களுடன் வந்து பாஸ்கரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்க பாஸ்கர் உடலை காரில் எடுத்து சென்று ரத்தக்கறை படிந்த பெட்சீட், தலையணை போன்றவற்றை அருகில் உள்ள குட்டையில் வீசியுள்ளனர். பாஸ்கரின் உடலை கல்குவாரியில் வீசிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. உஷா மற்றும் அவரது அண்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.