லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: மாவட்டத்தில் ரூ.50 கோடி சரக்குகள் தேக்கம்

லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக தேனி மாவட்டத்தில் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: மாவட்டத்தில் ரூ.50 கோடி சரக்குகள் தேக்கம்
Published on

தேனி,

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும், சுங்கச்சாவடி வரி உயர்த்தப்பட்டதை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக தேனி மாவட்டத்தில் இருந்து பருப்பு உள்ளிட்ட சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாமல் தேக்கம் அடைந்துள்ளன. வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்குகள் கொண்டு வரப்படவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 4,500 லாரிகள் இந்த வேலை நிறுத்தம் காரணமாக இயக்கப்படவில்லை.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக போடி பகுதியில் ஏலக்காய், காபி, எலுமிச்சை, இலவம்பஞ்சு போன்ற பொருட்களும், கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திராட்சை, வாழைப் பழங்கள் போன்றவையும் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் கம்பம் பகுதிகளில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளும் தேக்கம் அடைந்துள்ளன. அதேபோல், சின்னமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தேவதானப்பட்டி பகுதிகளில் தேங்காய் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி உள்ளது.

தேனி மாவட்டத்தில் லாரிகள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான சரக்குகள் பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுவது வழக்கம். வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 2 நாட்களில் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகளும், வியாபாரிகளும் எழுப்பத் தொடங்கி உள்ளனர். இதனால், இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

வேலை நிறுத்தம் மேலும் தொடரும் எனில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com