லாரி உரிமையாளர்கள் போராட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
லாரி உரிமையாளர்கள் போராட்டம்
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்காக 40 போர்வெல் எந்திர லாரிகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் பகுதியிலும் 20-க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல் லாரிகள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் டீசல் மூலம் இயங்குகின்றன.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் தங்கள் லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முதல் தொடங்கினார்கள். இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட போர்வெல் லாரி உரிமையாளர் சங்க பொறுப்பாளர்கள் ரெத்தினராஜா, சக்திவேல், மற்றும் மூர்த்தி ஆகியோர் கூறியதாவது:-


போர்வெல் போடும் ஒரு லாரியில் டிரைவர் மற்றும் 10 தொழிலாளர்கள் வரை பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு சம்பளம் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் போது பதிக்கப்படும் குழாய் மற்றும் டீசல் ஆகியவற்றை லாரி உரிமையாளர்கள் தான் தருகின்றனர். பொதுவாக ஒரு அடி போர் போட தற்போது ரூ.70 வசூலிக்கப்படுகிறது.

சமீப காலமாக டீசல் மற்றும் குழாய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஒரு அடி ரூ.70-க்கு ஆழ்துளை கிணறு அமைக்க முடியவில்லை. இதனால் அந்த பணிகள் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து விலையேற்றத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதன் காரணமாக லாரி உரிமையாளர்களாகிய நாங்கள் போர்வெல் லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

எங்களை பொறுத்தவரை அரசு டீசலுக்கு ஜி.எஸ்.டி.வரி தனியாக வசூலிக்கக்கூடாது. மேலும் தினசரி டீசல் விலையை உயர்த்தாமல் 6 மாதத்திற்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். போர்வெல் லாரி உரிமையாளர்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். இல்லையென்றால் போர் போட வழங்கும் தொகையை ஒரு அடிக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை வழங்க உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த தொடர் போராட்டத்தில் சிவகங்கை மாவட்டம் மற்றும் மேலூர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அவர்கள் தங்கள் லாரிகளை சிவகங்கையை அடுத்த மலம்பட்டி அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com