மனைவியின் தங்கையை காரில் கடத்த முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் கைது

2-வது திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் மனைவியின் தங்கையை காரில் கடத்த முயன்ற அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தார்கள்.
மனைவியின் தங்கையை காரில் கடத்த முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் கைது
Published on

ஊஞ்சலூர்,

ஊஞ்சலூர் அருகே உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மனைவி சரசுவதி. இவர்களுடைய மகள்கள் சுகந்தி (வயது 34), குமுதவள்ளி (31).

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகிரி அருகே உள்ள கவுரிசங்கர் (41) என்பவருக்கும், சுகந்திக்கும் திருமணம் நடைபெற்றது.

கவுரிசங்கர் கொடுமுடி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளராக உள்ளார். இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு சரசுவதி இறந்துவிட்டதால், குமுதவள்ளி அக்காளின் வீட்டுக்கு சென்று அவர்களுடன் வசித்துவந்தார். குமுதவள்ளி சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் அரசு தொடக்கபள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அக்காள் வீட்டில் இருந்தே பள்ளிக்கும் சென்றுவந்தார்.

திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால், மனைவியின் தங்கை குமுதவள்ளியை 2-வதாக திருமணம் செய்துகொள்ளலாம் என்று கவுரிசங்கர் ஆசைப்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மாமாவின் எண்ணம் தெரிந்ததும் குமுதவள்ளி தேவம்பாளையத்தில் உள்ள தன்னுடைய தந்தை வீட்டுக்கு வந்து, அங்கிருந்து பள்ளிக்கு சென்றுவந்தார்.

இதனால், உன்னால்தான் குமுதவள்ளியை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை என்று தொடர்ந்து மனைவி சுகந்தியிடம் கவுரிசங்கர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் அவரும் கோபித்துக்கொண்டு கடந்த 3 மாதத்துக்கு முன் தன்னுடைய தந்தை வீட்டுக்கே வந்துவிட்டார். இதற்கிடையே கடந்த 20 நாட்களுக்குமுன் குமுதவள்ளி வேலை பார்க்கும் பள்ளிக்கே கவுரிசங்கர் சென்று, தன்னை திருமணம் செய்துகொள் என்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குமுதவள்ளி விடுமுறை போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்தார்.

மருமகன் இங்கேயும் வந்து தகராறு செய்வாரோ? என்று பயந்த கந்தசாமி குள்ளக்கவுண்டன்புதூரில் உள்ள தன்னுடைய தங்கை நல்லம்மாள் என்பவருடைய வீட்டில் குமுதவள்ளியை கொண்டு சென்றுவிட்டிருந்தார். அங்கு தங்கியிருந்த குமுதவள்ளி நாள்தோறும் கொளாநல்லியில் உள்ள பூங்குழலி அம்மன் கோவிலில் விளக்கு போட்டு வந்துள்ளார்.

கடந்த 17-ந் தேதி மாலையும் வழக்கம்போல் கோவிலுக்கு விளக்குப்போட சென்றார். இதையறிந்த கவுரிசங்கர் வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு கொளாநல்லி சென்றார். அங்கே கோவிலில் சாமிகும்பிட்டுக்கொண்டு இருந்த குமுதவள்ளியை கையை பிடித்து இழுத்து, வா ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறி இருக்கிறார். உடனே குமுதவள்ளி அய்யோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்தியுள்ளார்.

சத்தம்கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். உடனே கவுரிசங்கர் தயாராக இருந்த காருக்குள் ஏறி அமர்ந்தார். பொதுமக்கள் பிடித்துவிடக்கூடாதே என்று, டிரைவர் வேகமாக காரை ஓட்டியுள்ளார். சத்திரப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, தாறுமாறாக ஓடிய கார் ரோட்டு ஓரம் கவிழ்ந்தது. உடனே பின்னாலேயே வாகனங்களில் துரத்தி வந்த பொதுமக்கள் கவுரிசங்கரை பிடித்து மலையம்பாளையம் போலீசில் ஒப்படைத்தார்கள்.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்தார். பின்னர் கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு கவுரிசங்கர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com