

புதுச்சேரி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ந் தேதி அமலில் உள்ளது. இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இதன் காரணமாக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசு திட்டமிட்டது.
அதன்படி பெரிய மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள், புதுவை பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. அங்கு பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தினமும் கடைகளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது.
பஸ்கள் ஓடாததால் வெறிச்சோடி கிடந்த பஸ் நிலையம் விசாலமாக இருந்ததால் பொதுமக்கள் நெருக்கடி இன்றி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியபடி இருந்தனர். கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் பறக்கும் கேமரா மூலம் பஸ் நிலைய கடைகளில் கூட்டத்தை கண்காணித்தனர். எங்கெங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லையோ அதை கண்டுபிடித்து போலீசார் எச்சரித்தனர்.
இதுதவிர முதலியார்பேட்டை, லாஸ்பேட்டை, அஜீஸ்நகர், தட்டாஞ்சாவடி, மீன் மார்க்கெட் ஆகிய இடங்களிலும் காய்கறி கடைகள் போடப்பட்டிருந்தன. இதனால் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இடநெருக்கடி இன்றி பொருட்களை வாங்கிச் சென்றனர்.
ஏற்கனவே அறிவித்து இருந்தபடி பால், மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் பிற்பகல் 2.30 மணியுடன் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து முக்கிய சாலைகள் வெறிச்சோடின.