ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

அய்யம்பாளையம்-மருதாநதிஅணை இடையே ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் இருந்து மருதாநதி அணைக்கு 7 கி.மீ. தூர தார்சாலை செல்கிறது. மருதாநதி அணைப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் மருதாநதி ரோட்டின் இருபுறம் மற்றும் மருதாநதி அணையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா விவசாயம் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாலையை சீரமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு பணிகள் தொடங்கியது.

ஆய்வு பணிகள் முடிந்து ரூ.4 கோடி மதிப்பில், 7 இடங்களில் பாலங்களுடன் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதையடுத்து சாலை முழுவதும் பெயர்த்து புதிதாக எடுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் பணிகள் தொடங்கி 6 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவடையவில்லை. ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் தோட்டங்களுக்கு மோட்டார் சைக்கிளில் கூட செல்லாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை அமைக்கும் பணியால் அந்த வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் தொழிலாளர்கள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்து வருகின்றனர்.

எனவே அய்யம்பாளையத்தில் இருந்து மருதாநதி அணைக்கு செல்லும் சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com