தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் கோர்ட்டில் ஆஜராக வந்த ரியல் எஸ்டேட் அதிபரை, மர்மகும்பல் பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்தது.
தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை
Published on

தூத்துக்குடி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி அய்யனடைப்பை சேர்ந்தவர் பச்சைக்கண்ணன். இவருடைய மகன் சிவகுமார் (வயது 41). இவர் தற்போது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் வசித்து வந்தார். அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிவகுமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. இதில் ஆஜராவதற்காக சிவகுமார் பாளையங்கோட்டையில் இருந்து காரில் தூத்துக்குடிக்கு வந்தார்.

தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனது அண்ணன் வக்கீல் முத்துக்குமாரின் அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மற்றொரு அண்ணன் ராம்குமாருடன் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் கோர்ட்டுக்கு செல்லும் கேட் வழியாக செல்வதற்காக ரோட்டை கடந்து சென்றார். அவர் அந்த கோர்ட்டு கேட் அருகே சென்றபோது, அந்த பகுதியில் ஆங்காங்கே நின்று கண்காணித்துக் கொண்டு இருந்த மர்ம கும்பல் ஓடி வந்து சிவகுமாரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. தொடர்ந்து மர்ம கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிவகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக சிவகுமார் மீட்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆத்திபழத்தின் தம்பி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சிவகுமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இந்த கொலை தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com