தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: “தேவைப்பட்டால் சம்மன் அனுப்பி ரஜினிகாந்திடம் விசாரிக்கப்படும்” - ஒருநபர் ஆணைய வக்கீல் தகவல்

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேவைப்பட்டால் நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும்“ என ஒருநபர் விசாரணை ஆணைய வக்கீல் அருள்வடிவேல் சேகர் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: “தேவைப்பட்டால் சம்மன் அனுப்பி ரஜினிகாந்திடம் விசாரிக்கப்படும்” - ஒருநபர் ஆணைய வக்கீல் தகவல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணையத்தின் விசாரணை தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த ஆணையத்தின் 18-ம் கட்ட விசாரணை கடந்த 21-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் தொலைக்காட்சி செய்தியாளர்கள், நிருபர்கள் விசாரிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஒருநபர் விசாரணை ஆணைய வக்கீல் அருள்வடிவேல் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டு உள்ளனர். 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 3-வது வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள், பலியானவர் கள் குடும்பத்திற்கு நிவாரண நிதிகள் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும், சிலருக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண நிதி பரிசீலனையில் உள்ளன. அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அடுத்தக்கட்டமாக போலீஸ் அதிகாரிகள், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஊழியர்கள், ஆலை தொழிலாளர்கள் ஆகியோரை விசாரிக்க உள்ளோம். மேலும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைகள் தகுதிக்கேற்ற வேலை இல்லை என புகார்கள் வரப்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட பணிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரையும் காயம் அடைந்தவர்களையும் பார்த்து ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியபோது, இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர் என்று கூறினார். இதனால் அவர் விசாரணைக்கு அழைக் கப்படுவாரா? என்று ஆணைய வக்கீல் அருள்வடிவேல் சேகரிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கி சூடு தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தபோது ஒரு சில தகவல்களை குறிப்பிட்டு உள்ளார். அதனால் அவரிடம் கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையத்தில் சாட்சிகளாக ஆஜரானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அது தொடர்பாக ஆவணங்களையும் அவர்கள் தாக்கல் செய்து உள்ளனர். எனவே, தேவைப்படும் நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com