தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினம்: கடலில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி - படகுகள் கரையில் நிறுத்தம்

தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி பொதுமக்கள் கடலில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.
தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினம்: கடலில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி - படகுகள் கரையில் நிறுத்தம்
Published on

தூத்துக்குடி,

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி இந்தோனேஷியா அருகே பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி அலைகளாக உருவெடுத்தது. இந்த சுனாமி தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேரும், சுற்றுலா சென்ற இடத்தில் தூத்துக்குடியை சேர்ந்த 9 பேரும், நெல்லை மாவட்டத்தில் 5 பேரும், சுற்றுலா சென்ற இடத்தில் நெல்லையை சேர்ந்த 12 பேரும் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 615 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி தாலுகாவில் 634 வீடுகளும், சாத்தான்குளத்தில் 5 வீடுகளும், திருச்செந்தூரில் 83 வீடுகளும், விளாத்திகுளத்தில் 13 வீடுகளும் சேதம் அடைந்தன. மாவட்டத்தில் 638 கட்டுமரங்கள் நாசமானது.

சுனாமி கோரத்தாண்டவம் ஆடி 15 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் அதன் பாதிப்புகள் இன்னும் மக்களின் மனதை விட்டு அகலவில்லை. சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் தூத்துக்குடி மாவட்ட சிந்தாயாத்திரை மாதா மீனவர் நலச்சங்கம் சார்பில் சுனாமியில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் பங்குத்தந்தை உபார்சி, சங்க தலைவர் ஆல்ட்ரின், செயலாளர் எவலின், பொருளாளர் ராஜ், தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து மற்றும் மீனவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோன்று அ.ம.மு.க.வை சேர்ந்த முனியசாமி தலைமையில் மீனவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில் அ.ம.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சுனாமி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. அவை கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com