டி.வி. நடிகை சேஜல் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

டி.வி. நடிகை சேஜல் சர்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.வி. நடிகை சேஜல் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
Published on

மும்பை,

தனியார் டி.வி. சேனலில் ஒளிபரப்பாகிய தில் தோ ஹப்பி ஹே ஜி' என்ற இந்தி தொடரில் நடித்து இருந்தவர் 25 வயது நடிகை சேஜல் சர்மா. இவர் அந்த தொடரில் சிம்மி கோஷ்லா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மும்பையை அடுத்த மிராரோடு, சிவர் கார்டன் பகுதியில் உள்ள ராயல் நெஸ்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை நடிகை சேஜல் சர்மா தூக்கில் தொங்குவதை கண்டு அவருடன் தங்கியிருந்த தோழி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேஜல் சர்மாவை தூக்கு கயிற்றில் இருந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு நடிகையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நடிகையின் அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நடிகை எழுதி வைத்து இருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் நடிகை சேஜல் சர்மா, தனது சாவுக்கு யாரும் காரணமில்லை, தனிப்பட்ட காரணத்தினால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியிருந்தார்.

சேஜல் சர்மா நடித்து வந்த தில் தோ ஹப்பி ஹே ஜி' டி.வி. தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்துவிட்டது. அதன்பிறகு அவர் நடிப்பு வாய்ப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

நடிகை சேஜல் சர்மாவின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் ஆகும். இவர் நடிகர் அமீர்கான், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டி.வி. நடிகையின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com