ஆன்லைனில் போலி முகவரி கொடுத்து மிளகு மூட்டைகளை திருடிய 2 பேர் கைது

ஆன்லைனில் போலி முகவரி கொடுத்து மிளகு மூட்டைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைனில் போலி முகவரி கொடுத்து மிளகு மூட்டைகளை திருடிய 2 பேர் கைது
Published on

கோவை,

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். மிளகு வியாபாரி. இவரை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட சிலர், தாங்கள் கோவை காரமடையை சேர்ந்த வியாபாரிகள் என்றும், தங்களுக்கு 1 டன் மிளகு தேவை என்றும், அதற்குரிய பணத்தை மிளகு மூட்டைகளை அனுப்பியதும் கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய வசந்தகுமார் ஜீப் மூலம் 1 டன் மிளகுகளை மூட்டைகளில் வேன் மூலம் கோவைக்கு அனுப்பினார். அந்த வேனை டிரைவர் சிவக்குமார் ஒட்டி வந்தார்.

ஆனால் அவர், கோவையில் ஆர்டர் கொடுத்த முகவரியை தேடினார். அதை கண்டுபிடிக்க முடியாததால் வாகனம் ஓட்டி வந்த களைப் பில் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பகுதியில் வேனை நிறுத்தி விட்டு அங்கிருந்த கடையின் முன் படுத்து தூங்கினார். இதை நோட்டமிட்ட திருட்டு கும்பல், வேனில் இருந்த மிளகு மூட்டைகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து தூங்கி எழுந்த சிவக்குமார் பார்த்த போது வேனில் இருந்த மிளகு மூட்டைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து திருட்டு கும்பலை தேடி வந்தனர்.

2 பேர் கைது

மேலும் திருட்டு நடந்த இடத்தில் விசாரணை நடத்தி, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், மிளகு மூட்டைகளை திருட பயன்படுத்திய வாகனத்தின் எண் தெளிவாக பதிவாகியிருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி, கோவை போத்தனூரை சேர்ந்த அப்துல் நாசர் (35), சதாம் உசேன் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1 டன் மிளகு மூட்டைகள் மற்றும் திருட பயன்படுத்திய சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் 2 பேரும், ஆன்லைன் மூலம் பாதாம், முந்திரி, ஏலக்காய், மிளகு போன்ற விலை அதிகமான நறுமண பொருட்களை வாங்க போலியான முகவரிக்கு ஆர்டர் கொடுப்பது, அந்த பொருட்களை கொண்டு வரும் போது நூதன முறையில் திருடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து கைதான 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com