4-வது நாளாக தொடரும் கஞ்சா வேட்டையில் 2 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4-வது நாளாக தொடரும் கஞ்சா வேட்டையில் 2 பேர் கைது
Published on

கஞ்சா வேட்டை

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஒரு மாதத்துக்கு ஆபரேஷன் கஞ்சா 2.0 வேட்டையை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் இரவு பகலாக கஞ்சா வேட்டையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ரெயில்கள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவதை கட்டுப்படுத்த ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு அதிகளவில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதால், அவுரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆந்திரா மாநிலம் வழியாக தமிழகத்துக்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் அதிரடி கஞ்சா வேட்டையில் இறங்கி உள்ளனர்.

தொடர்ந்து 4-வது நாளாக...

அந்தவகையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் கண்காணிப்பில், இன்ஸ்பெக்டர்கள் வடிவுக்கரசி, சசிகலா தலைமையிலான ரெயில்வே போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 நாட்களாக அவுராவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு வந்த ரெயில்களில் மொத்தமாக 24 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அதில் ஒரு பெண்ணை மட்டும் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், தொடர்ந்து 4-வது நாளாக நேற்று அதிகாலை தன்பாத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்த ரெயிலில் போலீசார் சோதனை செய்த போது சந்தேகத்துகிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடைமைகளை போலீசார் சோதனை செய்தபோது, அவரது பையில் 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதார் ராணா (வயது 29) என்பது தெரியவந்தது.

தீவிர கண்காணிப்பு

இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், அரக்கோணம் ரெயில் நிலையத்திலும் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆந்திராவில் இருந்துதான் அதிகளவில் தமிழகத்துக்கு ரெயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வருகின்றனர்.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் போது, அதனை அறிந்து கொண்டு, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மெதுவாக வரும்போதே கஞ்சா பொட்டலங்களுடன் குற்றவாளிகள் நடுவழியிலேயே கீழே குதித்து, அங்கிருந்து பஸ் மூலம் தப்பி விடுகின்றனர். எனவே, ஆந்திர மாநில ரெயில்வே போலீசாருடன் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நடுவழியில் குதித்து தப்பி ஓடும் குற்றவாளிகளை பிடிக்க தனி குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com