திருச்சி அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து 2 பேர் பலி மாணவன் படுகாயம்

திருச்சி அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்ததில் 2 பேர் பலியாகினர். மாணவன் படுகாயமடைந்தான்.
திருச்சி அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து 2 பேர் பலி மாணவன் படுகாயம்
Published on

தா.பேட்டை,

திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த பள்ளிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 28). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது நண்பர் சுரேஷ் (30). கார் டிரைவர். இவர்களது உறவினர் கந்தசாமி என்பவரது மகன் பூபாலன்(15). இவர், கணேசபுரம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் 3 பேரும் சொந்தவேலை காரணமாக ஒரு காரில் முசிறிக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பள்ளிநத்தம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. தண்ணீர் இல்லாத சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றுக்குள் கார் விழுந்து நசுங்கியது.

கிணற்றுக்குள் கார் பாய்ந்ததை கண்டதும், அருகில் இருந்தவர்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கிணற்றுக்குள் இறங்கி காரில் இருந்தவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால், ரமேசும், சுரேசும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மாணவன் பூபாலன் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உதயகுமார் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேஷ், சுரேஷ் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com