வனப்பகுதியில் மரங்கள் வெட்டிய 2 பேர் பிடிபட்டனர் ரூ.75 ஆயிரம் அபராதம்

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் மரங்கள் வெட்டியதாக 2 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வனப்பகுதியில் மரங்கள் வெட்டிய 2 பேர் பிடிபட்டனர் ரூ.75 ஆயிரம் அபராதம்
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையில், வனவர் கதிரவன், வனக்காப்பாளர் செல்லப்பன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பெட்டமுகிலாளம் பகுதி காளிகட்டம் காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பேர் காப்புக்காட்டில் உள்ள வேங்கை மரம் மற்றும் அரிய வகை மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கெண்டிகானப்பள்ளி அருகே உள்ள பெருங்காடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 56), கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் ஊராட்சி பாகலம்பட்டி அண்ணநகர் பகுதியைச் சேர்ந்த முருகன் (34) என தெரியவந்தது.

ரூ.75 ஆயிரம் அபராதம்

இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் ஓசூரில் உள்ள வனஉயிரின காப்பாளர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வெட்டப்பட்ட மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com