திருச்செங்கோடு அருகே, இரு தரப்பினர் மோதல்: மணமகன் உள்பட 9 பேர் படுகாயம்

திருச்செங்கோடு அருகே, இரு தரப்பினர் மோதலில் மணமகன் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்செங்கோடு அருகே, இரு தரப்பினர் மோதல்: மணமகன் உள்பட 9 பேர் படுகாயம்
Published on

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு அருகே, இரு தரப்பினர் மோதலில் மணமகன் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் அசம்பாவிதத்தை தவிர்க்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சேலத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 25). இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அழைப்பிதழ் அடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று அழைப்பிதழ்களை வைத்து பூஜை செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பருத்திபள்ளி அன்னமார் கோவிலுக்கு சென்றார்.

இதேபோல திருச்செங்கோடு அருகே ராமாபுரம் பகுதியை சேர்ந்த சந்தானம் (22), பூவசரன் (26), பிரவீன் (21), ராமசாமி (51) உள்ளிட்டோரும் ஆடிப்பெருக்கையொட்டி அந்த கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். கோவில் பூட்டப்பட்டிருந்ததால் அவர்கள் கோவிலுக்கு முன்பு பூஜை செய்து வழிபட்டு விட்டு, பின்னர் மோட்டார் சைக்கிள்களில் ஊருக்கு திரும்பினர்.

அப்போது வழியில் பருத்திப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் அவர்கள் சென்றபோது அவர்களுக்கும், பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த விஜயகுமார் (22), அண்ணாதுரை (45), பிச்சம்மாள் (60), வெள்ளையம்மாள் (37) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அது இரு தரப்பு மோதலாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இதில் ஒரு தரப்பை சேர்ந்த ராகுல் உள்ளிட்ட 5 பேரும், மற்றொரு தரப்பை சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் மணமகன் ராகுல் மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் எலச்சிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரு தரப்பையும் சேர்ந்த 30 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து அசம்பாவிதத்தை தவிர்க்க அங்கு வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது. திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com