சாப்டூர் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 2 பேர் கைது

சாப்டூர் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட சென்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சாப்டூர் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 2 பேர் கைது
Published on

உசிலம்பட்டி,

சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு பீட் 10, டி.கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாப்டூர் வனத்துறை வனச்சரகர் பொன்னுச்சாமி, வனவர் முத்து கணேஷ், வனக்காப்பாளர் பாண்டி, வனக்காவலர் ராஜேந்திரன் உள்பட வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துள்ளுக்குட்டிநாயக்கனூரைச்சேர்ந்த குருவன் (வயது 45), தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உப்புத்துறையைச் சேர்ந்த சுப்பிரமணி (45) ஆகியோர் நாட்டுத்துப்பாக்கியுடன் மலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ரோந்து சென்ற வனத்துறையினரை பார்த்த அவர்கள் தப்பி ஓடினர். வனத்துறையினர் அவர்களை பிடித்த போது குருவன் மட்டும் சிக்கிக்கொண்டார். அவர் சாப்டூர் வனச்சரகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

தொடர்ந்து தப்பி ஓடிய சுப்பிரமணியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை வனத்துறையினரின் தேடுதல் வேட்டையில் மள்ளப்புரம் சோதனைச்சாவடி அருகில் வைத்து சுப்பிரமணியை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுப்பிரமணி அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து, வேலை செய்து வந்ததும், குருவன் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் காட்டுக்குள் வனவிலங்குகளை வேட்டையாட சென்றதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து வனத்துறையினர் குருவன், சுப்பிரமணி ஆகியோரை பேரையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com