பொத்தேரியில் கேபிள் டி.வி. டெக்னீசியன் கொலை வழக்கில் நண்பர் உள்பட 2 பேர் கைது

பொத்தேரியில் கேபிள் டி.வி. டெக்னீசியன் கொலை வழக்கில் நண்பர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொத்தேரியில் கேபிள் டி.வி. டெக்னீசியன் கொலை வழக்கில் நண்பர் உள்பட 2 பேர் கைது
Published on

குத்திக்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே கடந்த 4-ந்தேதி காலை ரெயில்வே தண்டவாளம் அருகே கத்திகுத்து காயங்களுடன் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக பொத்தேரி கிராம நிர்வாக அலுவலர் தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்த நபரின் உடலில் 20 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது இறந்து கிடந்த நபர் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் வரதராஜபுரம் 5-வது தெருவை சேர்ந்த நாராயணமூர்த்தி (வயது 39), என்பதும் சென்னையில் உள்ள தனியார் கேபிள் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நாராயணமூர்த்தி கத்தியால் குத்தப்பட்ட இடம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலைய எல்லைக்குள் வருவதால் ரெயில்வே போலீசார் அந்த வழக்கை அதிகாரிகள் உத்தரவின்படி கடந்த 9-ந்தேதி கூடுவாஞ்சேரி போலீசாருக்கு மாற்றம் செய்தனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கு குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காரணைப்புதுச்சேரி அண்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 34), அவரது நண்பர் பெருமாட்டுநல்லூர் லவகுசா நகர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து நாராயணமூர்த்தியை ரெயில்வே தண்டவாளம் அருகே கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இந்த கொலை குறித்து வெங்கட்ராமன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

இறந்த போன நாராயணமூர்த்தியும் நானும் நீண்ட கால நண்பர்கள். இதனால் அடிக்கடி நாராயணமூர்த்தி வீட்டுக்கு நான் சென்று வருவேன். அப்போது நாராயணமூர்த்தியின் மனைவி அம்முவை நான் ஒரு தலையாக காதலித்து வந்தேன்.

அம்முவை அடைவதற்கு நாராயணமூர்த்தி தடையாக இருந்தார். நான் ஒருதலையாக காதலித்து வந்தது நாராயண மூர்த்திக்கு தெரிந்துவிட்டது. இதனால் என்னை நாராயணமூர்த்தி 2 முறை கண்டித்தார். இதனால் அவரது மனைவியை அடைவதற்கு இடையூறாக இருந்த நாராயணமூர்த்தியை கொலை செய்ய திட்டம் தீட்டி சம்பவத்தன்று மது குடிப்பதற்காக பொத்தேரி அருகே அவரை வரவழைத்து நண்பருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தேன்.

இவ்வாறு வெங்கட்ராமன் வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வெங்கட்ராமன், கோபிநாத் இருவரையும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com