நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி கடல் அட்டைகள் பறிமுதல் 2 பேர் கைது

நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி கடல் அட்டைகள் பறிமுதல் 2 பேர் கைது
Published on

நாகப்பட்டினம்,

கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல்அட்டைகள் கடத்தப்படுவதை தடுக்க நாகை பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்க கடல் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் தமிழக கடலோர பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாகையில் இருந்து கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும சிறப்பு புலனாய்வு பிரிவு சூப்பிரண்டு சின்னச்சாமி தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நாகை டாட்டா நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த குடோனில், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள, 2 ஆயிரத்து 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து அவற்றை பதுக்கி வைத்திருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடோனில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்தது நாகை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முருகானந்தம்(வயது 47), புலியூரை சேர்ந்த ராஜ்குமார்(32) என்பதும் இவர்கள் நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு லாரி மூலம் கடல் அட்டைகளை எடுத்து சென்று பின்னர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் அட்டைகள் கடத்த முயன்ற முருகானந்தம், ராஜ்குமார் ஆகிய இருவரையும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் கடல் அட்டைகளை தூத்துக்குடிக்கு எடுத்து செல்ல பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளையும் போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com