நல்லூர் பகுதியில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

நல்லூர் பகுதியில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
நல்லூர் பகுதியில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
Published on

நல்லூர்

திருப்பூர்-காங்கேயம் ரோடு விஜயாபுரம் பழனியப்பா நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 64). இவரது மகன் ராமசாமி. இவர்கள் இருவரும் நேற்று காலை தங்கள் உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நல்லூர் முத்தணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு டீக்குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அதே டீக்கடையில் நின்றிருந்த 2 பேர் திடீரென்று ராமசாமி மோட்டார்சைக்கிளை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்த ராமசாமி தனது வண்டியை காணாமல் திடுக்கிட்டார். இதுகுறித்து நல்லூர் போலீசில் ராமசாமி புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் திருப்பூர் ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் நல்லூர் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமசாமி மோட்டார்சைக்கிள் திருட்டு போனது குறித்த தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த ராஜன் (28), திருப்பூர் பழவஞ்சிப்பாளையம் திருக்குமரன் நகர் பகுதியை சேர்ந்த வடிவேல் (44) என்பதும் தெரியவந்தது. இவர்கள் கருப்பாகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்ததும், அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் ராமசாமியிடம் இருந்து திருடப்பட்டதும் தெரியவந்தது. அத்துடன் ஏற்கனவே மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பாண்டித்துரை என்பவரின் மோட்டார்சைக்கிளை பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியின் அருகே திருடியதும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருட்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com