திருப்பூர் மாவட்டத்தில் 5-வது நாளில் 2 ஆயிரத்து 538 பேர் வேட்பு மனு தாக்கல்

திருப்பூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய 5-வது நாளான நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 538 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 5-வது நாளில் 2 ஆயிரத்து 538 பேர் வேட்பு மனு தாக்கல்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந் தேதி, 30-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு 17 உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 295 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஊரக பகுதியில் மொத்தம் 9 லட்சத்து 95 ஆயிரத்து 765 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கு 28 தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 363 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், மற்ற பதவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 1,132 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

நேற்று ஒரே நாளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,781 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 476 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 261 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 20 என மொத்தம் 2 ஆயிரத்து 538 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் தொடங்கி 5-வது நாளான நேற்று அதிகப்படியானவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததால் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள் பரபரப்புடன் காணப்பட்டன.

நேற்று வரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 616 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 705 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 323 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 26 பேரும் என மொத்தம் 3 ஆயிரத்து 670 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்றும் (சனிக்கிழமை) வேட்பு மனுதாக்கல் நடக்கிறது. 16-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com