

கொடைரோடு:
கொடைரோடு அருகே 500, 100 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். பழக்கடையில் மாற்ற முயன்றபோது அவர்கள் கையும் களவுமாக சிக்கினர்.
கள்ளநோட்டு சந்தேகம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள காமலாபுரத்தை சேர்ந்த சவரிமுத்து மனைவி சந்தனமேரி. இவர் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் காமலாபுரம் பிரிவு பகுதியில் பழக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மாலை 2 பெண்கள் வந்தனர். அப்போது அவர்கள் சில பழங்களை வாங்கினர்.
பின்னர் அந்த பழங்களுக்கான விலையை கேட்டுவிட்டு, சந்தனமேரியிடம் அந்த 2 பெண்களும் 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். அந்த நோட்டை வாங்கி பார்த்தபோது சந்தனமேரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண்களிடம் 500 ரூபாய் நோட்டு குறித்து கேட்டபோது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததுடன், சந்தனமேரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
2 பெண்கள் கைது
இதையடுத்து அந்த 2 பெண்களையும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சந்தனமேரி சுற்றிவளைத்து பிடித்தார். பின்னர் அந்த 2 பெண்களும் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கு 2 பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மாற்ற கொடுத்த 500 ரூபாய் நோட்டை சோதனை செய்ததில், அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 30-ம், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 3-ம் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட 2 பெண்கள் குறித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் திண்டுக்கல் பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்பாபு மனைவி சக்திசூர்யா (வயது 33), இவரது உறவினர் பழனி சண்முகபுரத்தை சேர்ந்த மணி என்ற சிவசுப்பிரமணி மனைவி நாகரத்தினம் (43) என்பது தெரிவந்தது. இதையடுத்து சக்திசூர்யா, நாகரத்தினம் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.
துருவி துருவி விசாரணை
இவர்கள் 2 பேருக்கும் கள்ளநோட்டுகள் எப்படி கிடைத்தது? யாரிடம் இருந்து வாங்கி வந்தார்கள்? கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பல் செயல்படுகிறதா? என்ற கோணத்தில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் போலீசார் அந்த 2 பெண்களிடமும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.