கரூர் அருகே மாயனூர் அம்மா பூங்காவில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பலி

கரூர் அருகே மாயனூர் அம்மா பூங்காவில் பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கரூர் அருகே மாயனூர் அம்மா பூங்காவில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பலி
Published on

கிருஷ்ணராயபுரம்,

கரூர் அருகே உள்ள கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனூரில் காவிரிக்கரையோரம் அம்மா பூங்கா உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த பூங்கா திறக்கப்பட்டது.

பூங்காவில் சிறுவர்கள் விளையாட ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகள் உள்ளன. பொதுமக்களை மேலும் கவரும் வகையில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை பூங்காவில் வெங்கமேட்டை சேர்ந்த தச்சுத்தொழிலாளி கண்ணன் (வயது35), அசோகன் (42) ஆகிய 2 பேர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சூரிய மின் சக்திக்கான இரும்பு குழாயை கண்ணன், அசோகன் ஆகியோர் சேர்ந்து தூக்கிய போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் இரும்பு குழாய் உரசியது. இதில் 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதனை கண்ட சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

அசோகன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை சக தொழிலாளர்களும், பூங்காவில் இருந்தவர்களும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அசோகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் மாயனூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அம்மா பூங்காவில் மின்சாரம் தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் கோவிந்தராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அம்மா பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com